-->

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் மற்றும் செவ்வாய் தோஷ பரிகாரங்கள்


செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

ஜாதகத்தில் லக்கினமானது, சந்திரன், சுக்கிரன் ஆகிய இவைகளுக்கு 2,4,7,8,12 ஆகிய இந்த இடங்களில் செவ்வாய் இருந்தால் அதனை செவ்வாய் தோஷமாக ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் பலரும் பயப்படுகிறார்கள். இதனால் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் என்பது விரைவில் கைகூடாது என நினைகிறார்கள். ஆனால் செவ்வாய் தோஷத்திற்கு என்று சில விதி விலக்குகள் உண்டு. இதை பற்றிய விரிவான விளக்கம் 'தேவ கேரளம்' என்ற ஜோதிட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

செவ்வாய் தோஷ பரிகாரங்கள்

அதன்படி செவ்வாயானது ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து, சந்திரன், சுக்கிரன் ஆகிய இவைகளுக்கு 2,4,7,8,12 ஆகிய இந்த இடங்களில் இருந்தாலும் கீழ்கண்ட நிலைகளில் இருந்தால் அந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இல்லை எனலாம் அல்லது அவர்களின் ஜாதகத்திலே செவ்வாய் தோஷமானது பரிகாரம் ஆகி விட்டது என்று அர்த்தம். அந்த விதிவிலக்குகள் என்னென்ன என்று பின்வருமாறு பார்க்கலாம்,

1. ஒருவரின் ஜாதகத்தில் லக்கினமானது கடகம், மற்றும் சிம்மமாக இருந்தால் செவ்வாய் எங்கு இருந்தாலும் அவர்களுக்கு தோஷம் இல்லை.

2. அதே போல சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகத்தில் தோஷம் இல்லை.

3. ஜாதகத்தில் செவ்வாயானது, குருவுடன் சேர்ந்து அல்லது குருவால் பார்க்கப்பட்டு அல்லது ஏதேனும் ஒரு விதத்தில் குருவுடன் சம்மந்தப்பட்டு இருந்தால் அதை செவ்வாய் தோஷமாகக் கருத முடியாது.

4. அதே போல செவ்வாய் புதனுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது புதனால் பார்க்கப்பட்டால் அதனையும் தோஷமாக கருத முடியாது.

5. செவ்வாயானது சூரியனுடன் சேர்ந்து இருந்தாலும் சூரியனால் பார்க்கப்பட்டாலும் தோஷம் இல்லை.

6. செவ்வாயானது சனி, ராகு, கேது போன்ற கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலும் அதை செவ்வாய் தோஷமாக கருத முடியாது.
 
7. செவ்வாய் தனது நட்பு வீடுகளான சிம்மம், தனுசு, மீனம் ஆகியவற்றில் இருந்தாலும் அல்லது அதன் உச்ச வீடான மகரத்திலோ இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.

8. அதே போல செவ்வாய் தனது நீச்ச வீடான கடகத்தில் இருந்தாலும் தோஷம் இல்லை.

9. செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்து இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.

10. செவ்வாய் இரண்டாம் இடத்தில் இருந்து அந்த இரண்டாம் இடம் புதனின் வீடாக இருக்குமேயானால் அந்த ஜாதகத்தில் தோஷம் இல்லை.

11. ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் நான்காம் இடம் செவ்வாயின் சொந்த வீடான மேஷம் மற்றும்  விருச்சிகம் ஆகியவற்றில் இருந்தால் தோஷம் இல்லை.

12. செவ்வாய் இருக்கும் ஏழாமிடம் அதன் உச்ச வீடான மகரம் அல்லது நீச்ச வீடான கடகம் ஆகியவற்றில் இருந்தாலும் தோஷம் இல்லை.

13. செவ்வாய் இருக்கும் எட்டாம் இடம் குருவின் வீடுகளான தனுசு அல்லது மீனமாக இருந்தாலும் தோஷம் இல்லை.

14. செவ்வாய் இருக்கும் பன்னிரெண்டாம் இடம் சுக்கிரனின் வீடான ரிஷபம் அல்லது துலாமாக இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.

இப்படியாக கிட்டத்தட்ட சுமார் 100 நிலைகள் செவ்வாய் தோஷத்திற்கு விலக்காக சொல்லப்பட்டுள்ளது. அதன் படி இவற்றை கழித்து விட்டு பார்த்தால் உலகில் வெகு சிலருக்கே செவ்வாய் தோஷம் உள்ளது எனலாம். அதனால் செவ்வாய் தோஷம் பற்றி பயம் கொள்ள தேவையில்லை.

அப்படியும் செவ்வாய் தோஷம் குறித்த பயம் கொள்பவர்கள் அதற்கு பரிகாரமாக திருசெந்தூர் முருகன் மற்றும் திருப்பதி எழுமலையானை தரிசனம் செய்தால் செய்வாய் தோஷம் நிவர்த்தியாகி விடும். 
   

சரி செவ்வாய் தோஷத்தை நினைத்து ஏன் எல்லோரும் பயம் கொள்கிறார்கள் தெரியுமா?

பொதுவாக செவ்வாயானது அதிக வீரியம் மற்றும் ஆற்றல் மிகுந்த கிரகம் ஆகும். ஒருவருக்கு வரும் கோபம், காமம், தைரியம் என அனைத்தும் ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் நிலையை வைத்து சொல்ல முடியும். இந்த நிலையில் ஆண்களுக்கு காட்டிலும், பெண்களுக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் அது பெரும் பிரச்சனை தான். காரணம் செவ்வாயானது உணர்ச்சிகளை அதிகம் வெளிபடுத்தும் கிரகமாகும்.

இன்னும் கொஞ்சம் வெளிப்படையாக சொல்ல வேண்டும் எனில் செவ்வாய் அதிக காம இச்சையை தரும் கிரகமாகும். இயல்பாகவே ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கு காம உணர்வுகள் என்பது சற்று கூடுதலாக இருக்கும். ஆனாலும் அதனை ஆண்களை போல வெளிப்படையாக காட்டி கொள்ள மாட்டார்கள். இதனால் செவ்வாய் தோஷம் இருக்கும் பெண்களுக்கு சற்று அதிகமாகவே காம இச்சை என்பது இருக்கும். அதனை இன்னொரு செவ்வாய் தோஷம் உள்ள ஆணால் மட்டும் தான் முழுமையாக பூர்த்தி செய்ய முடியும்.

அதனால் தான் அக்காலத்தில் பெரியோர்கள் இதனை வெளிப்படையாக சொல்ல முடியாமல் செவ்வாய் தோஷ ஜாதகத்திற்கு செவ்வாய் தோஷ ஜாதகத்தை தான் திருமணம் செய்ய வேண்டும் என்றார்கள்.

Previous Post Next Post