-->

இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் பயன்கள்


இஞ்சி

நம் அன்றாடம் செய்யும் சமையலில் சைவ மற்றும் அசைவ பதார்த்தங்களில் சுவைக்காக மட்டுமின்றி மருத்துவ பலன்களுக்காகவும் சேர்க்கப்படும் இஞ்சியின் வரலாறு குறித்தும், அதன் வேதியியல் தன்மை குறித்தும், பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் அற்புதம் குறித்தும் மற்றும் இஞ்சியைப் பயன்படுத்தி செய்யப்படும் சுவைமிகுந்த பதார்த்தங்கள் குறித்தும் நாம் விரிவாக பார்க்கலாம்.

இஞ்சி பழங்காலத்தில் இருந்தே உணவு மற்றும் மருந்துக்காக மிக அதிக அளவில் மக்களால் உபயோகபடுத்தபடுகிறது. பழங்காலத்தில் இருந்த பாரம்பரிய மருத்துவ முறையில் 50% மருந்துகள் இஞ்சியையே மூலப்பொருளாக கொண்டிருந்ததாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இஞ்சி உணவின் ருசி மற்றும் மணம் கருதி, அனைத்து வகையான உணவுகளிலும் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண பொருளாகும்.

இஞ்சி சாறு

பழைய மருத்துவ குறிப்புகளைப் பார்த்தால், இஞ்சி பச்சையாகவும், காயவைத்தும் மருத்துவமுறைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கி.மு 4ஆம் நூற்றாண்டு சீன நாட்டு மருத்துவ குறிப்புகளின்படி இஞ்சி வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கும், சுவாசப் பிரச்சனைகளுக்கும், வயிற்றுப்போக்கு, காலரா, பல் வலி, ரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருந்துள்ளது.

இந்தியாவில் ஆயுர்வேத குறிப்புகளில் இஞ்சி மிக முக்கிய மூலிகைப் மருந்து பொருளாக பயன்படுத்தபடுகிறது. ஆயுர்வேத மருத்துவ பயிற்சியாளர்கள் இஞ்சியை ஜீரணசக்தியை பெருக்கவும், பசியைத் தூண்டவும், உடலை சுத்திகரிக்கவும் சக்திவாய்ந்த மருந்தாக இஞ்சியை பரிந்துரைக்கின்றனர். மேலும், இஞ்சி ஆயுர்வேதத்தில் மூட்டு வலிகளுக்கும், சுவாசப் பிரச்சனைகளுக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது.

இஞ்சியில் உள்ள சத்துக்கள்


இஞ்சியில் பொட்டாசியம், மாங்கனீசு, குரோமியம், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம், விட்டமின்கள், மினரேல்ஸ் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது.

இஞ்சி ரகங்கள்


இஞ்சியில் பல வகையான ரகங்கள் உண்டு. அவற்றில் ரியோ டி ஜெனிரோ, மாரன் நடன், சுருச்சி, சுபிரபா, சுரவி, ஐஐஎஸ்ஆர், வராதா, ஐஐஎஸ்ஆர் மகிமா, ஐஎஸ்ஆர், ரிஜாதா அதிரா மற்றும் கார்த்திகா ஆகியவை முக்கிய இரகங்கள் ஆகும்.

இஞ்சியின் மருத்துவ பயன்பாடுகள்


இஞ்சி 5 ஆயிரம் வருடங்களாக சமையலில் மசாலாப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கீழ்க்கண்ட நோய்களை குணபடுத்துவதிலும் இயற்கை மருந்தாக இஞ்சி உள்ளது.

ஜீரணத்தை மேம்படுத்தும்


இஞ்சி ஜீரண சக்தியை அதிகபடுத்துகிறது. குடலிறக்க பிரச்சனையில் வயிற்றுப்பகுதி தசைகளுக்கு வலுசேர்த்து உதவுவதுடன், வாயு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. உணவிற்குப் பின், இஞ்சி டீ குடிப்பதன் மூலம் வாயுத் தொந்தரவுகள் குறைகிறது. வயிறு தொடர்பான பிரச்சனைகள் தீவிரமாக இருக்கும்போது இஞ்சி சாப்பிட்டு வருவதால் ஃபுட் பாய்சனிங் எனப்படும் உணவு விஷமாவது தடுக்கபடுகிறது.

மூட்டு வலி, மூட்டு சவ்வு பிரச்சனைகளுக்கு தீர்வு


இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால்எனப்படும் வேதிபொருள் மூட்டு மற்றும் தசைவலிகளுக்கு நல்ல நிவாரணத்தை வழங்கும். மெடிசினல் ஃபுட் எனும் மருத்துவ இதழில் வெளியாகியுள்ள ஆராய்ச்சிப்படி, இஞ்சி செல்லுலர் நிலையில் குறிப்பிட்ட தூண்டுதலை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.

மூச்சு பிரச்சனைகளை தீர்க்கும்


இஞ்சியிலுள்ள தன்மைகள் மூச்சு பிரச்சனைகளை சரி செய்யக் கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், காச நோய் உள்ளவர்களுக்கு மிகவும் உகந்த மருந்து இஞ்சி என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. இஞ்சி இரண்டு விதமான காச நோய்களை குணப்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. முதலில் ஜவ்வு போல இருக்கும் காற்றோட்டமான தசைகளில் அடைத்து இருக்கும் என்சைம்களை நீக்கவும், இரண்டாவதாக காற்று வழிகளை தளர்த்தும் மற்ற என்சைம்களை தூண்டிவிடவும் செய்கிறது.

குமட்டல், வாந்தியை கட்டுபடுத்தும்


குமட்டல், வாந்தி போன்ற அஜீரணக் கோளாறுகளுக்கு நல்ல மருந்தாக இஞ்சி விளங்குகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் காலைநேர உபாதை, பயணம் செய்யும்போது ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சையின்போது உண்டாகும் குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகளுக்கும் குணமளிக்கிறது.

 
இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும்


இஞ்சியில் சர்க்கரை நோயை தடுக்க மட்டுமல்லாமல் அதை குணப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளும் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து 30 நாட்கள் காய வைத்த இஞ்சி பொடியை 3 கிராம் அளவு உட்கொண்டால், ரத்தத்தில் க்ளுகோசின் அளவு, ட்ரைக்ளிசரைட் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளையும் கணிசமாக கட்டுப்படுத்தலாம். சர்க்கரை வியாதி உள்ளவர்களின் ஈரல், சிறுநீரகம், நரம்பு மண்டலம் போன்ற எல்லா உறுப்புகளையும் பாதுகாக்கும் சக்தி இஞ்சிக்கு உண்டு. கண்ணில் உண்டாகும் புரை வராமல் தடுக்கும் குணம் இஞ்சிக்கு உண்டு.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்


ஜலதோஷம் மற்றும் ஜுரத்திலிருந்து நம்மை காக்கும் அற்புதமான ஆற்றல் கொண்டது இஞ்சி. மூச்சுத் திணறல் மற்றும் மூச்சுக் குழாய் அழற்சிகளை ஆற்றும் குணம் கொண்ட இஞ்சி, இருமல், தொண்டை அழற்சி மற்றும் ப்ரொங்கைடிஸ் போன்ற உபாதைகளை குணமாக்கும். இஞ்சிச் சாறுடன் எலுமிச்சம் பழச்சாறும், தேனும் கலந்து குடிப்பதால் ஜலதோஷம் மற்றும் ஜுரம் போன்ற அன்றாடம் நமக்கு வரும் நோய்களிருந்து விடுதலை கிடைக்கும்.

 
இதயத்தை வலுபடுத்தும்


இஞ்சியில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், மாங்கனீசு, குரோமியம், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் போன்ற கனிமத் சத்துக்கள் அழற்ச்சிகளை நீக்கும் குணம் மிகுந்தது. இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் தன்மை மிக்கது இஞ்சி. இஞ்சியில் உள்ள ஒரு வித கணிமம் கொழுப்புத்தன்மையை குறைக்க, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த, ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த, ரத்த நாளத்தில் உள்ள அடைப்புகளை நீக்க என்று பல இருதய நோய்களை குறைக்கும் மற்றும் நீக்கும் தன்மை கொண்டது.

ஆன்டி-ஆக்ஸிடென்ட் நிறைந்தது


இஞ்சி சட்னி

ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ் என்பது சில அடிப்படை மூலக்கூறுகளிலிருந்து - அதாவது மூப்பு மற்றும் பல வயதினால் ஏற்படும் சிதைவுகள், புற்று நோய், இருதய நோய், சர்க்கரை வியாதி, மூட்டு வியாதி, அல்ஜெமெர் - போன்ற வியாதிகளிலிருந்து காப்பதற்கு மிக முக்கியமான ஒரு கனிமம். இது இஞ்சியில் அதிக அளவு காணப்படுகிறது.

இஞ்சி ஊறுகாய், கறிபொடிகள், கறி விழுது, கறிமசாலாக்கள் ஆகியவற்றில் அதிகம் உபயோகிக்கப்படுகிறது. மேலும் காரவகை உணவு பொருட்களில்  ருசிக்காக சேர்க்கபடுகிறது. இஞ்சி ரொட்டிகள், இஞ்சி பிஸ்கட்டுகள், இஞ்சி முரபாக்கள், இஞ்சி பானங்கள் போன்றவை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மூட்டு வீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. மூட்டு வலி, ஒற்றைத்தலைவலி, வாந்தி போன்றவைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இவ்வாறு பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட இஞ்சியை அன்றாடம் பயன்படுத்துவோம், நோயின்றி வாழ்வோம்.


Previous Post Next Post