-->

சுக்கு மருத்துவ பயன்கள்


சுக்கு

சுக்கிற்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்ரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்பது அந்த முன்னோர் வாக்கு. அது போல் சுக்கு இருந்தால் உங்களுக்கு நோய் என்ற பகைவன் இருக்காது. காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் என தினமும் இந்த மூன்றையும் ஏதோ ஒரு வகையில் அன்றாடம் சேர்த்துக் கொண்டால் நோயே நம்மை நெருங்காது.

சுக்கின் மருத்துவ பயன்கள்


இஞ்சியை நன்றாக உலர வைத்தபின், நீர் வற்றிய நிலையில் இருப்பது தான் சுக்கு. இது அவ்வளவு எளிதில் கெடாது. ஆனால் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து நன்மைகளும் இதில் அடங்கியுள்ளது. சுக்கு எந்த வகையான உணவையும் செரிமானம் அடைய செய்துவிடும். உடலில் உள்ள நச்சுக்களை முறித்துவிடும். குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தமாக்கும்.

சுக்கு மருத்துவப் பயன்கள்


மூட்டுவலியை குணமாக்கும்

சுக்குடன் சிறிது பால் சேர்த்து அரைத்து, அதை நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறியவுடன், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமடையும்.

பித்தத்தை போக்கும்

சுக்கைத் பொடி போல தூள் செய்து, சிறிது எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள பித்தம் தீரும்.

சளியை விரட்டும்

சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் கஷாயம் போல செய்து பருகி வந்தால், கடுமையான சளி இருந்தாலும் மூன்று நாட்களில் குணமாகும்.

வாயுத்தொல்லை போக்கும்

சுக்கு சிறிது எடுத்து அதை ஒரு வெற்றிலையுடன் சேர்த்து மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

தலைவலியை விரட்டும்

சுக்குடன் சிறிது நீர் சேர்த்து சிறிது விழுது போல அரைத்து, நெற்றியில் தடவி வந்தால் தலைவலி தீரும்.

உடலுக்கு சுறுசுறுப்பை தரும்

சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக் குடித்து வந்தால் உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும்.

மது போதையை தெளிய வைக்கும்

சுக்குடன், தனியா வைத்து சேர்த்து அதில் சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து சாப்பிட்டால், அதிக மது அருந்தியதால் ஏற்பட்ட போதை தெளிந்து இயல்பு நிலை உண்டாகும்.

அலர்ஜி குணமாகும்

சுக்குடன் சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் அலர்ஜி குணமாகும்.

 
வாந்தி குமட்டலை விரட்டும்

சுக்குடன், சிறிது துளசி இலையை சேர்த்து மென்று தின்றால், தொடர்ந்து ஏற்படும் வாந்தி, குமட்டல் நிற்கும். சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு குணமாகும். குரல் இயல்பு நிலைபெறும்.

மலச்சிக்கலை குணமாக்கும்

சிறிது சுக்கு எடுத்து அதை சின்ன வெங்காயத்துடன் வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் தேங்கியுள்ள தீமை தரும் கிருமிகள் அழியும். இதனால் மலசிக்கல் தீரும். மேலும் சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

சுக்கு காபி பயன்கள்


விஷக்கடிகளை குணமாக்கும்

தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால் கொஞ்சம் சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் நீர் குடித்தால் விஷம் முறியும்.

தலைவலி மற்றும் இருமலை போக்கும்

சுக்கை வெல்லத்துடன் சாப்பிட்டால் விக்கல் நிற்கும். சுக்கை கஷாயம் போல செய்து பருகினால் இருமலைப் போக்கும், மேலும் பசியை அதிகரிக்கச் செய்யும். சுக்கு சேர்த்துக் காய்ச்சப்பட்ட பால், தலைவலியைக் குணமாக்கும்.

மசக்கை குமட்டலை குணபடுத்தும்

சுக்கு பிரசவ மருந்தாக பயன்படும். மசக்கை நேரத்தில் இஞ்சியும், சுக்கும் சாப்பிட்டால் வாந்தி, குமட்டல் போன்றவற்றை போக்கும். இரண்டு ஸ்பூன் சுக்குப் பொடியை அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் கால் லிட்டர் ஆகும் வரை காய்ச்சி, மூன்று வேளை ஆறு ஸ்பூன் அளவுக்குக் குடித்தால் வயிற்றுவலி, பொருமல், பேதி, குமட்டல், ருசியின்மை ஆகியவை நீங்கும்.
Previous Post Next Post