-->

மங்களம் தரும் மாங்கல்யத்தின் சிறப்புகள் என்ன என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டுமா ?

தாலி

தாலியின் சிறப்புகள் என்ன

ஒரு பெண் திருமணம் ஆனவர் ,ஒருவரின் மனைவி என்று அவரை பார்க்கும் ஆடவருக்கு உணர்த்துவது அவள் அணிந்திருக்கும் தாலி தான்.ஒரு பெண் எத்தனை நகை அணிந்திருந்தாலும் நம் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் விதமாக மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யத்தைக் கட்டிக்கொள்வதே சிறப்பாகும்.

மஞ்சள் கயிறு என்பது ஆண்,பெண் இருவரையும் இணைக்கும் வெறும் கயிறாக மட்டும் இல்லாமல் இந்த சமுதாயத்தில் ஒரு பெண்ணுக்கு மனைவி என்ற அந்தஸ்தையும்,ஒரு ஆணுக்கு கணவன் என்ற அந்தஸ்தையும் பெற்றுத் தருகிறது.

தாலியின் மகிமை
தாலியின் ஒன்பது இழைகள் சொல்லும் நற்குணங்கள்

மணமகன் மணமகளுக்கு அணியும் மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது. ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களையும் குறிக்கிறது.

தெய்வீகக் குணம்,
தூய்மைக் குணம்,
மேன்மை,
தொண்டு,
தன்னடக்கம்,
ஆற்றல்,
விவேகம்,
உண்மை,
உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல்

இத்தனைக் குணங்களும் புகுந்த வீட்டிற்கு வரும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யம் அணியப்பெறுகின்றது.

மேலும், திருமணத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கும் போது மாங்கல்ய தந்துனானேன என்று மந்திரம் சொல்லுவார்கள்.
தந்து என்றால் கயிறு. மஞ்சள் கயிறு தான் தந்து என குறிப்பிடப்படுகிறது. மஞ்சள் சரடில் தாலி இருந்தால் தான் மங்களம். வறுமையில் வாடும் பெண்கள் கூட தங்கத்தாலியை அடகு வைத்து விட்டு, மஞ்சள் கயிறில் மஞ்சள் கிழங்கை கட்டி தாலியாக அணிந்து கொள்வார்கள். ஆக தாலி என்பது மஞ்சள் சரடில் தான் இணைந்து இருக்க வேண்டும்.
மஞ்சள் சரடு

கணவன் வாழும்வரை மனைவி மார்பில் எப்பொழுதும் இத்தாலி தவழ வேண்டும். அவனை நெஞ்சோடு தான் தாங்கி வாழும் தன்மையை காலம் முழுவதும் அப்பெண் எடுத்துக்காட்ட வேண்டும்.

தங்கத்தில் மஞ்சள் கயிற்றில் தாலி அணிவதே பெண்களுக்கு சிறப்பாகும். மஞ்சளில் நனைத்த திருமாங்கல்ய கயிற்றில் மூன்று முடிச்சு போடுவது விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்னும் மூன்று நிலைகளை குறிப்பதாகும்.

இந்த மூன்று நிலையிலும் ஒரு பெண் தெய்வீக உணர்வுடன் இருக்க வேண்டும். எண்ணம், சொல், செயல் மூன்றாலும் தூய்மை மிக்கவளாக திகழ வேண்டும். தெய்வ பக்தி, குடும்ப பெரியவர்களிடம் மதிப்பு, கணவரிடம் அன்பு ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்பதை எடுத்துரைப்பதாகும்.

நம்மை படைத்த இறைவன், தேவர்கள் சாட்சியாக போடப்படுவது முதல் முடிச்சு. நம் மூதாதையர்கள் சாட்சியாக போடப்படுவது இரண்டாவது முடிச்சு. பெற்றோர்கள்,சகோதர ,சகோதரிகள்  திருமணத்திற்கு வருகை தந்தவர்களின் சாட்சியாக போடப்படுவது மூன்றாம் முடிச்சாகும்.

கழுத்தில் எத்தனை வகையான நகைகள் அணிந்தாலும், மஞ்சள் சரடினால் ஆன தாலியை அணிந்தால் அதன் மகத்துவம் தனி தான். இதைத்தான் இறைவனும் விரும்புவான். கணவருக்கும் ஆயுள் நீடிக்கும் என்கின்றனர் மகான்கள். மஞ்சள் நனைத்த கயிற்றில் தாலி அணிவதே சிறப்பாகும்,அதுவே நம் பாரம்பரியமுமாகும்.
Previous Post Next Post