-->

பூண்டின் ஆரோக்கிய பயன்கள் மற்றும் நன்மைகள்


பூண்டு

நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் அத்தனை பொருள்களும் எதோ ஒரு  வகையில் நம் ஆரோக்கியத்துக்கு உதவி புரிகின்றன என்று உணர்ந்துதான் நம் முன்னோர்கள் உணவு முறையையும் வாழ்க்கை முறையையும் அமைத்து கொடுத்தார்கள். அப்படி அவர்கள் அதிகம் பயன்படுத்திய உணவு பொருளில் முக்கியமான ஒரு பொருள் பூண்டு.

பூண்டு சமையல்


பூண்டு தாவர வகைகளுள் ஒன்று. இவை உறுதியில்லாத, பச்சை நிறம் கொண்ட தண்டுகளுடன் கூடியவை. பூண்டுகள் ஒரு மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்டவை. இவை குறிப்பிட்ட பருவகாலத் தாவரங்கள். நிலத்துக்கு மேல் உள்ள இதன் பகுதிகளான இலை, தண்டு என்பன குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டுமே காணப்படும். அதன் பின்னர் அவை அழிந்துவிடும்.

பூண்டு ஒருவித காரமான சுவையும், நாற்றமிக்க குணமும் கொண்டது. பூண்டை வெறும் வாயில் சாப்பிடமுடியாது. அதனால் எல்லா உணவு பொருள்களிலும் இதை பயன்படுத்தி வந்தார்கள்.

பூண்டில் அடங்கியுள்ள சத்துகள்

பூண்டு பெரும்பாலும் எல்லா சமையலிலும் பயன்படுத்தப்படுகிறது பூண்டில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, பி6, பொட்டாசியம், தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு,அயோடின், சல்ஃபர், குளோரின் புரதம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. 

பூண்டு வகைகள்

பூண்டுகளில் ஒருதலை பூண்டு, மலை பூண்டு, தரை பூண்டு, நாட்டு பூண்டு, தைவான் அல்லது சைனா பூண்டு என்று பல வகைகளில் உண்டு.

அதே பூண்டுகளில் ஓராண்டுத் தாவரங்கள், ஈராண்டுத் தாவரங்கள், பல்லாண்டுத் தாவரங்கள் என்னும் மூன்று வகைகள் இருக்கின்றன. ஓராண்டுத் தாவர வகையைச் சேர்ந்த பூண்டுகள், ஓராண்டுக்குள் அவற்றின் வளரும் காலம் முடிவடைந்ததும் முற்றிலும் அழிந்து விடும். ஈராண்டுத் வகைப் பூண்டு முதல் ஆண்டுப் பருவகால முடிவில் இலைகளும், தண்டுகளும் அழிந்தாலும், நிலத்துக்குக் கீழ் வேர்கள், கிழங்குகள் போன்ற பகுதிகள் சிறிது காலம் உயிருடன் இருக்கின்றன.
அடுத்த பருவகாலத்தில் அவற்றில் இருந்து தண்டுகளும் இலைகளும் வளர்ந்து பூத்து, வித்துக்களை உருவாக்கியபின் இறந்துவிடுகின்றன. பல்லாண்டுப் பூண்டுகளில், நிலத்தின் கீழுள்ள சில பகுதிகள் பல ஆண்டுகள் ஆனாலும் நிலைத்திருக்கக் கூடியவை. ஒவ்வொரு பருவகாலத்திலும் புதிதாகத் தண்டுகளும், இலைகளும் உருவாகின்றன.

பூண்டின் பயன்கள்

பூண்டுத் தாவரங்கள் பழங்காலத்திலிருந்தே சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பூண்டு மருத்துவத்திலும், சமையலிலும் இன்றியமையாத பொருளாக உள்ளது. பல பூண்டுகளின் தண்டு, இலை, வேர், கிழங்கு முதலிய உறுப்புகள் ஊட்டச்சத்துகள் கொண்ட உணவாக அமைகின்றன. அதே போல வேறு சில பூண்டுகளின் உறுப்புக்கள் உணவில் வாசனைப் பொருட்களாகப் பயன்படுகின்றன. பல பூண்டுகளின் பகுதிகள் மருத்துவக் குணம் கொண்டவை. பூண்டுத் செடி அழகிய பூக்கள்,  இலைகளை கொண்டிருப்பதால், அலங்காரத் தாவரங்களாகவும் வீடுகளில் வளர்கப்படுகின்றன.

பூண்டின் மருத்துவ பயன்கள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தால் உடல் சோர்வு, உடல் பலவீனம், மனச் சோர்வு போன்றவை ஏற்படும். பூண்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ் உடலுக்கு மிகுந்த நோய் எதிர்ப்புச்சக்தியை அளிக்கிறது. இதனால் உடலும் மணமும் புத்துணர்ச்சி அடைகிறது.

தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்

தாய்பால் அதிகம் சுரக்க சுரக்க பூண்டை வேகவைத்து பாலில் கலந்து சாப்பிடுவார்கள். பாலில் பூண்டை ஊறவைத்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, குழந்தைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தரைப்பூண்டு


உடல் பருமனைக் குறைக்கும்

பூண்டு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். உடல் எடை குறைய விரும்புபவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் பூண்டை மென்று சாப்பிட்டால் தொப்பை படிப்படியாக குறைவதோடு கணிசமாக உடல் எடையும் குறையும்.

தாம்பத்திய வாழ்க்கை மேம்படும்

தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபாடு குறைந்தவர்கள், ஆண்மைக் குறைபாடு கொண்டவர்கள், பூண்டை சாப்பிட்டு வந்தால் இல்லற வாழ்க்கையில் அதிக ஈடுபாடு ஏற்படும்.

சளியை வெளியேற்றும்

சளி தொந்தரவு கொண்டவர்கள் பாலில் நான்கு பூண்டு பற்களைச் சேர்த்து குடித்துவந்தால் நெஞ்சில் உள்ள சளி இளகி கழிவில்  வெளியேறும். காச நோய் உள்ளவர்களுக்கும் இது சிறந்த மருந்து. பூண்டில் இருக்கும் ஈதர் நுரையீரல் குழாயில் கெட்டியான சளி அடைத்திருந்தால் அதைக் கரைத்து வெளியேற்றும்.

புற்றுநோயை தடுக்கும்

புற்றுநோயைத் தடுக்கும் சக்தி பூண்டுக்கு உண்டு. மேலும் புற்றுநோய் பாதிப்பால் ஏற்படக்கூடிய புண்களுக்கு மருந்து மாத்திரைகள் சாப்பிடும் போது அதனுடன் ஒரு பூண்டையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் புண்கள் விரைவாக ஆறும்.

குடல் புழுக்களை வெளியேற்றும்

உடல் நலன் ஆரோக்கியமாக இருக்க ஆறுமாதங்களுக்கு ஒருமுறை வயிற்றில் இருக்கும் கழிவு மற்றும் பூச்சுகளை வெளியேற்ற வேண்டும். அதற்கு மருந்து, மாத்திரைகளை விட துரிதமாக பக்கவிளைவுகள் எதுவுமின்றி வெளியேற்ற உதவுகிறது பூண்டு.

சர்க்கரை நோயை கட்டுபடுத்தும்

சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் சாப்பிட்டும் கட்டுக்குள் வராமல் இருப்பவர்கள் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டு வந்தால் உடலின் இன்சுலின் சுரப்பு அதிகரித்து சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

இரத்தத்தைச் சுத்திகரிக்கிறது

இரத்தத்தில் நச்சுக்கள் சேரும் போது உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படும். அவ்வாறானவர்கள் பூண்டை உணவில் சேர்த்து கொண்டால் இரத்தத்தில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறுவதோடு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பையும் கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.

மேலும் பூண்டு சீரணக் கோளாறுகளை சரி செய்கிறது. இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்துகிறது. அஸ்பெர்ஜிலஸ் மற்றும் கான்டிடா போன்ற பூஞ்சை காளான்களின் வளர்ச்சியை தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. நுண்ணுயிரிகள் வளர்ச்சியை தடுக்கிறது, சரும நோய்கள் போன்றவற்றை தடுக்கும் பொருளாகவும் பூண்டு விளங்குகிறது.
Previous Post Next Post