-->

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - மீனம்


குரு பெயர்ச்சி மீன ராசி


எதையும் வெளிப்படையாக பேசாமல் அனைத்தையும் மனதிற்குள் வைத்துக் கொள்ளும் குணம் கொண்ட மீன ராசி அன்பர்களே !

இது நாள் வரையில் உங்களது ராசிக்கு 9 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 28.10.2019ம் தேதியும் திருக்கணிதப்படி 5.11.2019 தேதியும் உங்களது ராசிக்கு 10 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இதனால் இனி வரும் காலங்களில் நீங்கள் உத்யோகம் மற்றும் தொழில் ரீதியாக அதிக பொறுப்புக்களை ஏற்க வேண்டி இருக்கலாம். மேலதிகாரிகளிடம் பேசும் சமயத்தில் நிதானத்தை கையாளவும். வேலை ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கலாம். இதனால் சின்னச், சின்ன சோர்வுகள் வந்து போகலாம்.

குரு பெயர்ச்சி மீன ராசி 2019 பலன்கள்


நீங்கள் நினைத்தால் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள இயலும். பெரிய பதவியில் இருப்பவர்கள் கீழ் வேலை ஆட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கப் பாருங்கள். முடிந்தவரையில் குறைகளை பெரிது படுத்தாதீர்கள். அதிக வேலை பளு இருந்தாலும் கூட முடிந்தவரையில் குடும்பத்திற்கும் நேரம் ஒதுக்கப் பாருங்கள். எக்காரணம் கொண்டும் வேலையை மட்டும் விட்டு விடாதீர்கள். மற்றபடி, மேல் அதிகாரிகள் அல்லது நிர்வாகத்தினரால் உங்களை வேலையில் இருந்து வெளியேற்றவே முடியாது. காரணம் அந்த அளவிற்கு நீங்கள் வேலையை நன்றாக, பொறுப்பாக செய்யக்கூடியவர்கள் என்பதை அவர்களும் அறிவார்கள்.

சில சமயங்களில் பிறரது தவறுக்கும் சேர்த்து நீங்கள் பொறுப்பு ஏற்க வேண்டிய நிலை வரலாம். சங்கடப் படாதீர்கள், இறுதியில் நீங்கள் குற்றமற்றவர் என்பதை நிர்வாகம் அறிந்து கொள்ளும். மற்றபடி, எதிலும் கவனமாக இருந்து கொள்ளுங்கள். உடன் பணி புரிபவர்களிடம் கூட பேச்சில் அதிக நிதானத்தை கடைபிடிக்கவும். எனினும் 24.1.2020 முதல் சனி பகவான் உங்களது ராசிக்குப் 11 ஆம் இடமான லாபஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இதனால் மேற்கண்ட தேதிக்குப் பிறகு உங்களது பொருளாதாரம் மெல்ல - மெல்ல சிறப்படையும். திடீர் பணவரவு உங்களது தேவைகளை நல்ல படியாக நிறைவேற்றித் தரும். முயற்சிகளில் சிறு, சிறு தடைகள் வந்தாலும் கூட இறுதியில் வெற்றி உங்களுக்கே கிடைக்கப்பெறும்.
கொடுக்கல் - வாங்கல் போன்ற விஷயங்களில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் சமயத்தில் மட்டும் சற்று கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வெளியூர், வெளிநாடு தொடர்புடைய தொழில்களை செய்பவர்கள் ஒருவகையில் ஆதாயத்தையும் பெறுவீர்கள். திருமணம் போன்ற சுப காரிய பேச்சுவார்த்தைகளில் அலைச்சல் இருந்தாலும் கூட இறுதியில் முயற்சிக்கு தக்க நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கப்பெறும். 23.9.20 வரையில் ராகு/ கேதுக்கள் சாதகமாக இல்லை. குரு பலமும் இல்லை என்பதால் அதிக அலைச்சலை நீங்கள் தவிர்க்க இயலாது. எனினும் முயற்சிக்கு தக்க படி நற்பலன்கள் கிடைக்கப்பெறும். குல தெய்வ வழிபாட்டை மட்டும் வருடாவருடம் செய்யத் தவறாதீர்கள். அது நிச்சயம் உங்களை சோதனைகளில் இருந்து காக்கும்.

பெண்கள்:

உடல் ஆரோக்கியம் ஏற்ற - இறக்கமாக இருந்தாலும் கூட பெரிய பாதிப்புகளுக்கு இடம் இல்லை. பணவரவு உங்களது தேவைக்கு ஏற்றபடி இருந்து வரும். திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகளில் அலைச்சல் இருந்தாலும் கூட இறுதியில் உங்களது முயற்சிக்குத் தக்க நல்ல பலன் கிடைக்கப்பெறும். உற்றார் - உறவினர்கள் ஓரளவு சாதகமாக இருப்பார்கள். கொடுக்கல் - வாங்கல் போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. சீட்டுப் பிடிப்பது போன்ற காரியங்களில் பெண்கள் கவனமாக இருந்து கொள்ளுங்கள். பணத்தால் பிரச்சனைகள் வரலாம். வேலை தேடும் பெண்களுக்கு புதிய வேலை வாய்ப்பு சற்றே தாமதம் ஆகலாம். மொத்தத்தில் இந்தக் குரு பெயர்ச்சி உங்களுக்கு சுமாரான பலன்களை தான் தரும்.

உடல் ஆரோக்கியம்:

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட இடம் உண்டு. எனினும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்பட இடம் இல்லை. முடிந்த வரையில் முன்பே யூகித்து தேவை இல்லாத பயணங்களை எல்லாம் தவிர்க்கப்பாருங்கள். சில நேரங்களில் வேலை பளு அதிகரிக்கும் என்பதால் நேரத்திற்கு உண்ண முடியாத நிலை கூட உங்களுக்கு ஏற்படலாம். எனினும் இது நாள் வரையில் இருந்து வந்த வம்பு - வழக்குகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும்.

குடும்பம் மற்றும் பொருளாதார நிலை:

பணவரவு தேவைக்கு ஏற்றபடி இருந்து வரும். குடும்ப தேவைகள் அனைத்தும் நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். உற்றார் - உறவினர்களின் ஆதரவு ஓரளவு உங்களுக்கு மகிழ்ச்சி தரும். கணவன் - மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் யாவும் படிப்படியாகக் குறையும். எனினும் சிலர் அசையும், அசையா சொத்துக்களை வாங்கலாம். திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகளில் அலைச்சல் அதிகம் இருக்கலாம். எனினும் முயற்சிக்கு தக்க நல்ல பலன் கிடைக்கும்

தொழில், வியாபாரம்:

பணவரவு ஏற்ற - இறக்கமாகேவ இருந்து வரும் என்பதால் கொடுக்கல் - வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். அதிலும் கமிஷன், கான்டராக்ட் போன்ற தொழில்களில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பிறருக்கு வாக்கு கொடுப்பதை தவிர்க்கப்பாருங்கள். பிறரை நம்பி ஜாமீன் கையெழுத்து போட்டு விடாதீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நெருக்கடி ஏற்பட இடம் உண்டு. தொழிலில் போட்டிகளை கடந்தே நீங்கள் வெற்றி பெறுவீர்கள். முடிந்த வரையில் தேவை இல்லாத பயணங்களை முன்பே தீர்மானித்து தவிர்க்கப்பாருங்கள். மொத்தத்தில் இது ஒரு சுமாரான காலமாகவே உங்களுக்கு இருக்கும். எனினும் பெரிய பாதிப்புகளுக்கு இடம் இல்லை.

உத்தியோகஸ்தர்கள்:

உத்யோகத்தில் தேவை இல்லாத நெருக்கடிகள் அதிகரிக்க இடம் உண்டு. மேலதிகாரிகளின் கெடுபிடிகள் சில சமயங்களில் எல்லை மீறினாலும் கூட நீங்கள் சமாளித்து வெற்றி அடைவீர்கள். எனினும் சில சமயங்களில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் கூட ஏற்பட இடம் உண்டு. பேச்சில் நிதானத்தை கடைபிடித்தால் இதில் இருந்து தப்பலாம். புதிதாக வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வேலையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் வேலையை மட்டும் விட்டு விடாதீர்கள்.

அரசியல்வாதிகள்:

நீங்கள் உங்களது பதவிகளை தக்க வைத்துக் கொள்ள அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். நீங்கள் செய்யும் சிறு தவறு கூட கட்சியில் பெரிதாகப் பேசப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாமல் போகலாம். சமூகத்தில் உங்களது நன்மதிப்பை தக்க வைத்துக் கொள்ள அதிகம் நீங்கள் போராட வேண்டி இருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கலாம். பணவிஷயங்களில் நெருக்கடிகள் அதிகரிக்கும் காலம். எனினும், பயணங்களால் சின்னச் சின்ன அனுகூலம் ஏற்படும்.

விவசாயம் செய்பவர்கள்:

எதிர்பார்க்கும் மகசூலைப் பெற அதிகம் பாடு பட வேண்டி இருக்கும். அரசு வழியில் கூட கெடுபிடிகள் அதிகம் இருக்கலாம். கடன் தொல்லைகள் சிலருக்கு அதிகரிக்கலாம். கால் நடைகளை வளர்ப்பவர்கள் தேவை இல்லாத சில மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடலாம். மொத்தத்தில் சோதனைகளை கடந்து நீங்கள் வெற்றி பெற வேண்டி இருக்கும்.

மாணவ - மாணவியர்:

கல்வியில் மந்தமான நிலை காணப்படலாம். நண்பர்களை தேர்ந்து எடுத்துப் பழகுவது நன்மை தரும். தேவை இல்லாத பொழுது போக்குகளை தவிர்க்கப்பாருங்கள். உல்லாசப் பயணங்கள் செல்லும் வாய்ப்பு சிலருக்கு கிடைக்கப்பெறலாம். பெற்றோர் - ஆசிரியர்களின் ஆதரவு அவ்வப்போது உங்களுக்கு மகிழ்ச்சி தரும்.

குரு பகவான் சஞ்சாரம் 28.10.2019 முதல் 4.1.2020 வரை :

பொருளாதார நிலை சுமாராகத் தான் இருக்கும். சின்னச் சின்ன அலைச்சல்களை தவிர்க்க முடியாது. அவ்வப் போது உடல் சோர்வு, மந்த நிலை ஏற்படும். எனினும் இவற்றை எல்லாம் கடந்து நீங்கள் இறுதியில் சாதிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களை அதிகம் அனுசரித்துச் செல்லுங்கள். கணவன் - மனைவி இடையே தேவை இல்லாத வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எனினும், உற்றார் - உறவினர்கள் அவ்வப்போது உங்களுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள்.
திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகளில் அலைச்சல் இருந்தாலும் கூட இறுதியில் அனுகூலமான பலனைத் தரும். கொடுக்க - வாங்கலில் மட்டும் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இழுபறி நிலை ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் சிலர் லாபம் பெறலாம். உத்யோகம் செய்பவர்கள் முடிந்த வரையில் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்க்கப் பாருங்கள். குறிப்பாக உங்களது பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உங்களுக்கு நல்லது. எதிர்பார்க்கும் உதவிகள் தடை இன்றி கிடைக்கப்பெறும். மாணவர்களுக்கு முயற்சிக்கு தக்க நல்ல பலன் கிடைக்கப்பெறும். அரசு வழியில் கூட எதிர்பார்க்கும் உதவிகள் அலைச்சலைக் கடந்து இறுதியில் கிடைக்கப் பெறும். சிலருக்குப் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கப் பெறும். அதனால் சில நன்மைகளையும் பெற இடம் உண்டு.

குரு பகவான் சஞ்சாரம் 5.1.2020 முதல் 7.3.2020 வரை :

தொழில் அல்லது உத்யோகத்தில் எதிர் நீச்சல் போட்டு நீங்கள் முன்னேற வேண்டி இருக்கும். 24.1.2020 முதல் உங்களது ராசிக்கு சனி பகவான் 11 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். இது வரையில் இருந்து வந்த போராட்டங்கள் குறையும். திடீர் தனவரவு உங்களது தேவைகளை நிறைவேற்றும். இதனால் பழைய கடன்கள் கூட அடைபடும். எனினும் 10 ஆம் இடத்து குருவால் சிலருக்கு அசையும், அசையா சொத்துக்களில் வீண் பணவிரயங்கள் ஏற்பட இடம் உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களை அதிகம் நீங்கள் அனுசரித்துச் செல்லுங்கள். உத்யோகஸ்தர்கள் குறிப்பாக பிறர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கப்பாருங்கள். அவ்வப்போது உடல் ஆரோக்கியத்தில் சோர்வு அல்லது மந்த நிலை காணப்படலாம். நேரத்திற்கு உண்டு - உறங்க முடியாத நிலை கூட சிலருக்கு ஏற்பட இடம் உண்டு. பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் கொடுக்கல் - வாங்கலில் கூடுதல் நிதானத்துடன் இருந்து கொள்ளுங்கள்.
திடீர் என்று சிலருக்கு ஆன்மீக அல்லது தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்க இடம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வு தாமதப்படலாம். குறிப்பாக உயர் அதிகாரிகளிடம் பேசும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் வேலை ஆட்களிடம் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெற அதிக முயற்சிகளை எடுக்க வேண்டிய நேரம். எனினும் உங்களது முயற்சிக்கு உரிய நல்ல பலன் இறுதியில் உங்களை வந்து அடையும்.

குரு பகவான் சஞ்சாரம் 8.3.2020 முதல் 29.3.2020 வரை :

தொழில் மற்றும் உத்யோக ரீதியாக சில நெருக்கடிகளை நீங்கள் சந்திக்க நேரலாம். எனினும் பணவரவு தேவைக்கு ஏற்றபடியே இருந்து வரும். எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்பாராத உதவிகள் கூட சில சமயங்களில் தக்க சமயத்தில் உங்களுக்கு கிடைக்கப்பெறும். ஆரோக்கியத்தில் மட்டும் நீங்கள் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்வது உங்களுக்கு நன்மை தரும். உற்றார் - உறவினர்களால் அவ்வப்போது சில விரயங்களை நீங்கள் சந்திக்க இடம் உண்டு. ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். எனினும் பெரிய உடல் உபாதைகள் வருவதற்கான வாய்ப்பு குறைவு தான். நிதானத்தை கடைப்பிடித்து இத்தருணத்தில் முடிந்த வரையில் முன்கோபத்தை குறைத்துக் கொள்ளப்பாருங்கள். கணவன் - மனைவி ஒற்றுமை ஓரளவு சிறப்பாகவே இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பல விதமான போட்டிகளைக் கடந்து எதிர்பார்க்கும் லாபத்தை இறுதியில் பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கப்பெறும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை தரலாம். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு முன்னேற வேண்டிய தருணம். எனினும் இறுதியில் கண்டிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு சிலர் பெருமை சேர்ப்பீர்கள்.

குரு பகவான் சஞ்சாரம் 30.3.2020 முதல் 14.5.2020 வரை :

இது குரு பகவான் அதிசாரமாக சஞ்சரிக்கும் காலம். இக்காலத்தில் எடுக்கும் முயற்சிகளில் இறுதியில் சாதகமான பலனை நீங்கள் அடைவீர்கள். கணவன் - மனைவி ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். செலவுகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். சிலரால் சேமிக்கவும் இயலும். பழைய கடன்கள் கூட சிலருக்கு அடைபடலாம். சிலர் அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருத்தல் வேண்டும். குடும்பத்தில் சுப காரிய முயற்சிகள் தாமதம் ஆனாலும் கூட இறுதியில் நல்ல பலன்கள் ஏற்படும். கொடுக்கல் - வாங்கலில் மட்டும் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கப்பெறும். கூட்டாளிகள் இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சற்றே விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் கூட அவற்றை எல்லாம் சமாளித்து இறுதியில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். மாணவர்கள் மட்டும் கல்வியில் கூடுதல் கவனத்துடன் படிக்க வேண்டிய நேரம் இது. எனினும் உங்களது முயற்சிக்கு தக்க நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கும்.

குரு பகவான் சஞ்சாரம் 15.5.2020 முதல் 12.9.2020 வரை :

எதையும் எதிர்கொண்டு, பெரும்பாலும் நீங்கள் ஏற்றம் பெரும் காலம் இந்தக் காலம். பணவரவு தேவைக்கு ஏற்றபடி சிறப்பாகத் தான் இருக்கும். திடீர் தனவரவு ஏற்பட்டு உங்களது குடும்பத்தேவைகள் அனைத்தும் நல்லபடியாகப் பூர்த்தி ஆகும். கணவன் - மனைவி இடையே சிறு, சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் கூட அதனால் பெரிய அளவில் ஒற்றுமை குறையாது. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் நீங்கள் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டி இருக்கும். உற்றார் - உறவினர்கள் ஓரளவு உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல் - வாங்கல் ஓரளவு சரளமாக நடைபெறும். கொடுத்த கடனை வசூலிப்பதில் பெரிய தடைகள் இருக்காது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப்பெறும். சிலருக்கு சக ஊழியர்களின் தொந்தரவு குறையும். தொழில், வியாபாரத்தில் சிலருக்கு எதிர்ப்புகள் குறையும். எனினும் முன்கோபத்தை குறைத்து சரியான திட்டமிடுதலை மேற்கொண்டு லாபம் அடைய வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப்பெறும். எனினும் பிறர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். கல்விக்காக சிலர் பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். இந்தக் கால கட்டத்தில் விநாயக வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.

குரு பகவான் சஞ்சாரம் 13.9.2020 முதல் 30.10.2020 வரை :

குரு பகவானின் சஞ்சாரம் மீண்டும் சோதனையை தரும் விதத்தில் இந்தக் காலத்தில் குறிப்பாக காணப்படுகிறது. இதனால் உடல் சோர்வு, மந்த நிலை காணப்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் அதிக நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய கால கட்டமாக இந்தக் கால கட்டம் உள்ளது. அதிலும் குறிப்பாக கூட்டாளிகளிடம் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்க தாமதம் ஆகலாம். எனினும் பிறர் விஷயங்களில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது என்பது உங்களுக்கு நன்மையை செய்யும். கணவன் - மனைவி இடையே சிறு, சிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் கூட பெரிய அளவில் ஒற்றுமை குறைய வாய்ப்பு இல்லை. 23.9.20 முதல் ராகு பகவான் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் மேற்சொன்ன தீய பலன்கள் அனைத்தும் உங்களுக்குப் பெருமளவில் குறையும். மாணவர்கள் கல்வியில் முயற்சிக்கு தக்க மதிப்பெண்களை பெறுவார்கள். எனினும் சிலர் போட்டிகளில் பரிசுகளை வெல்வீர்கள்.

குரு பகவான் சஞ்சாரம் 31.10.2020 முதல் 20.11.2020 வரை :

இந்தக் காலத்தில் அவ்வப்போது சில சோதனைகள் வந்தாலும் கூட நீங்கள் எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள். குடும்பத்தில் பொருளாதார நிலை ஏற்றம் பெரும். இனி வரும் காலங்களில் தேவைகள் ஓரளவு பூர்த்தி ஆகும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சிலருக்கு நல்ல படியாக நடந்தேறும். சிலருக்கு பழைய கடன் பாக்கிகள் கூட வசூலாகும். இன்னும் சிலர் தாங்கள் வாங்கிய பழைய கடன்களை கூட அடைப்பார்கள். குரு சாதகம் இல்லாமல் இருந்தாலும் கூட சனி பகவான் சாதகமாக இருப்பதால் பெரும்பாலும் உங்களுக்கு நன்மைகள் தான் நடைபெறும். புத்திர வழியில் சிலர் வீண் செலவுகளை சந்திக்க இடம் உண்டு. கணவன் - மனைவி இடையே மட்டும் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய காலம் இது. குறிப்பாக பேச்சில் அதிக நிதானத்தை கடைபிடிக்க வேண்டி இருக்கும். மற்றபடி, தொழில் - வியாபாரத்தில் எதிர்ப்புகள் குறையும். அதே சமயத்தில் புதிய வாய்ப்புகளை நழுவ விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைத்தாலும் கூட ஊதிய உயர்வு கிடைக்கத் தாமதம் ஆகலாம். மாணவர்கள் கல்வியில் அதிக மதிப்பெண்ணை எடுக்கக் கூடுதல் முயற்சியை மேற்கொள்ள வேண்டி இருக்கும். சிலருக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைத்து. அது பிற்கால வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமையக்கூடும். இப்படியாக நன்மை தீமை என்ற இரண்டுமே கலந்து நடக்கும் படியாக இந்தக் கால கட்டம் இருக்கும். எனினும், இதில் பெரும்பாலும் நன்மைகள் தான் பலருக்கு அதிகம் வந்து சேரும் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

பரிகாரம்:

வியாழக்கிழமையில் அசைவம் சேர்க்காமல் முடிந்தால் அல்லது உடல் ஒத்துழைத்தால் விரதம் இருந்து உங்களது குல தெய்வத்தை வணங்கி வாருங்கள். உடன் நெய் தீபம் ஏற்றி மஞ்சள் நிற பூக்கள் கொண்டு வழிபட்டு வாருங்கள். கோளறு பதிகமும் படித்து வாருங்கள்.


வணங்க வேண்டிய தெய்வம் : தட்சிணாமூர்த்தி

ராசியான திசை : வட கிழக்கு

ராசிக்கல் : கனக புஷ்பராகம்

ராசியான கிழமை : வியாழன்

ராசியான நிறம் : மஞ்சள்

ராசியான எண்கள் : 2,3,9

Previous Post Next Post