-->

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - மிதுனம்


குரு பெயர்ச்சி மிதுன ராசி


கலைகளில் பிரியம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

உங்களது ராசிக்கு இது வரையில் 6 ஆம் இடத்தில் இருந்து சோதனைகளை தந்து வந்த குரு பகவான். வாக்கிய பஞ்சாங்கப்படி 28.10.2019ம் தேதியும் திருக்கணிதப்படி 5.11.2019 தேதியும் உங்களது ராசிக்கு 7 ஆம் இடத்தில் சஞ்சரிக்க இருப்பது உங்களுக்கு பெரும்பாலும் பல விதங்களில் நன்மையை செய்யும் விதத்தில் தான் இருக்கும். இதனால் பொருளாதாரம் நல்ல விதங்களில் சிறப்புப் பெறும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கூட நல்ல படியாக நடந்தேறும். திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இனி வரும் காலங்களில் குழந்தை பாக்கியம் உண்டாகும். சிலருக்கு சொத்துக்களை வாங்கும் படியான யோக பாக்கியம் கூட ஏற்படும்.

குரு பெயர்ச்சி பலன்கள் மிதுனம் 2019

தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளுடன் இருந்து வந்த மோதல் போக்குகள் முடிவுக்கு வரும். பயணங்களால் கூட அனுகூலமான நிலை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கப்பெறும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடு சென்று பணி புரியும் வாய்ப்பு கூட கிடைக்கப்பெறும். எனினும், ராகு / கேது சஞ்சாரத்தால் கணவன் - மனைவி இடையே மட்டும் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. அந்நிய நபர்களை தலையிட விடாமல் நீங்களே உங்களுக்குள் பிரச்சனைகளை பேசித்தீர்ப்பது மிக நல்லது. 24.1.2020 முதல் அஷ்டம சனி ஆரம்பித்தாலும் கூட குரு பெயர்ச்சி உங்களுக்கு நன்மையை தான் செய்யும். எனினும் 24.1.2020 முதல் உங்களது ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக உணவு விஷயத்தில் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

பெண்கள்:

உடல் ஆரோக்கியத்தில் அவசியம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. மற்றபடி திருமண வயதை அடைந்தவர்களுக்கு மனம் போல மாங்கல்யம் அமையும். திருமணம் ஆன தம்பதிகள் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. திருமணம் ஆகி குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கப்பெறும். மற்றபடி பொருளாதார நிலை சிறப்பாகத் தான் இருக்கும். இதனால் குடும்பத் தேவைகள் நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். சிலருக்கு சேமிப்பு உயரும். இன்னும் சிலர் ஆடம்பர பொருள்களை வாங்கி மகிழ்வார்கள். உறவினர்களை மட்டும் அதிகம் அனுசரித்துச் செல்லுங்கள்.

உடல் ஆரோக்கியம்:

உடல் ஆரோக்கியத்தில் சிறு, சிறு பாதிப்புகள் இருக்கலாம். எனினும் பெரிய பிரச்சனைகளுக்கு இடம் இல்லை. பெரும்பாலும் குடும்பத்தில் உள்ளவர்களின் மருத்துவச் செலவு குறையும். எனினும் ஜனவரி மாதத்திற்குப் பிறகு கை, கால், மூட்டுகள் போன்றவற்றில் அவ்வப்போது வலி வந்து போகலாம். சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு அதாவது ஜனவரி மாதத்திற்குப் பிறகு உடலில் அவ்வப்போது சோர்வு நிலை வந்து போகலாம். எனினும், நீங்கள் நினைத்தால் உங்களை எப்போதுமே சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ள உங்களால் நிச்சயம் முடியும். மற்றபடி, மருத்துவச் செலவுகள் குறையும். ஆனால், அதே சமயத்தில் சின்னச் சின்ன உடல் உபாதைகளையும் தவிர்க்க இயலாது தான். இருப்பினும் சமாளித்து விடுவீர்கள்.

குடும்பம் மற்றும் பொருளாதார நிலை:

பொருளாதார நிலை பெரும்பாலும் முன்னேற்றமாகத் தான் இருக்கும். சிலருக்குப் பழைய கடன்கள் கூட படிப்படியாகக் குறையும். இன்னும் சிலருக்கு கொடுத்த பணம் வந்து சேரும். ராகு/ கேது பெயர்ச்சி மற்றும் சனிப்பெயர்ச்சி போன்றவை சாதகமாக இல்லாத காரணத்தால் உறவினர்களை மட்டும் மனம் நோக பேசி விட வேண்டாம். அதேபோல, எப்போதுமே பேச்சில் நிதானமாக இருந்து கொள்ளுங்கள். சிலருக்கு பூமி, வீடு, வாகனம் போன்றவற்றை எல்லாம் வாங்கும் பாக்கியம் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் சிலர் ஈடுபட்டு மகிழ்வார்கள். நேர்த்திக் கடன்களை சிலர் பூர்த்தி செய்வார்கள். மொத்தத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உங்கள் தேவைகள் நிறைவேறும்.

தொழில், வியாபாரம்:

கமிஷன், காண்டிராக்ட் போன்ற தொழில்களில் ஈடுபட்டு லாபம் சம்பாதிக்க இயலாதவர்களின் நிலை இனி வரும் காலங்களில் மாறும். கொடுக்கல் - வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் கூட இனி வரும் காலங்களில் படிப்படியாகக் குறையும். வழக்குகள் கூட ஒரு முடிவுக்கு வரும். கொடுத்த கடன்கள் கூட வசூலாகும். மற்றபடி, தொழில் - வியாபாரத்தில் இது வரையில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளை இனி வரும் நாட்களில் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கூட கிடைக்கப்பெறும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் மட்டும் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்லப் பாருங்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல திருப்பங்களை நீங்கள் சந்திப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்:

உத்யோக ரீதியாக வெளியூர்களுக்கு சிலர் செல்ல வேண்டி வரலாம். அலைச்சல் மட்டும் ஓயாமல் இருக்கும். எனினும் இது நாள் வரையில் சிலருக்குத் தடை பட்டு வந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை நல்ல படியாக கிடைக்கப்பெறும். பெரும்பாலும் அனைத்தையும் சிறப்பாக செய்து முடித்து அனைவரது பாராட்டுக்களையும் நீங்கள் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடு செல்ல விரும்புபவர்களின் எண்ணங்கள் கூட நல்ல படியாக ஈடேறும். மொத்தத்தில் உத்யோகஸ்தர்களுக்கு அனைத்து வகையிலும் நன்மை உண்டு.

அரசியல்வாதிகள்:

அரசியலில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டு. கட்சிப் பணிகளில் முன்பை விட அதிகமாக நீங்கள் பிசியாக இருப்பீர்கள். சனி பெயர்ச்சிக்குப் பிறகு அதாவது ஜனவரி மாதத்திற்குப் பிறகு தேவை இல்லாத வீண் விரயங்கள் ஏற்பட இடம் உண்டு. அதனால் பண விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருங்கள். சில சமயங்களில் கட்சிப் பணிகளை கூட நீங்கள் உங்களது சொந்த செலவில் செய்ய வேண்டி இருக்கலாம். எனினும் நிச்சயம் உங்கள் உழைப்பிற்கான பலனை இந்தக் குருப் பெயர்ச்சியில் நீங்கள் பெறுவீர்கள்.

விவசாயம் செய்பவர்கள்:

எதிர்பார்த்த அளவில் மகசூல் சிறப்பாக இருக்கும். குறிப்பாக விவசாயிகள் சிலருக்கு சில புதிய தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப்பெறும். கால் நடை, பால் தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கப்பெறும். பழைய கடன்கள் கூட சிலருக்கு அடைபடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இது வரையில் நீங்கள் பட்ட பாடுகளுக்கு ஒரு விமோச்சனம் கிடைக்கப்பெறும்.

மாணவ - மாணவியர்:

கல்வியில் இது நாள் வரையில் இருந்து வந்த மந்த நிலை படிப்படியாக மாறும். சில மாணவர்கள் பரிசுகள் கூட வெல்வார்கள். பெற்றோர், ஆசிரியர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். விரும்பிய பாடம் கூட கிடைக்கப்பெறும். சில மாணவர்களுக்கு வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கப்பெறும்.

குரு பகவான் சஞ்சாரம் 28.10.2019 முதல் 4.1.2020 வரை :

இந்தக் காலம் உங்களுக்குப் பெரும்பாலும் அற்புதமான கால கட்டமாக இருக்கும். கணவன் - மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாகக் குறையும். தொழிலில் இருந்து வந்த தேக்க நிலை ஒரு முடிவுக்கு வரும். அதிலும் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு அரசு வழியில் மகிழ்ச்சியான அறிவுப்பு வந்து சேரும். பூமி, மனை வாங்கும் முயற்சிகள் சிலருக்கு சாதகம் ஆகும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நல்ல பெயர் கூடும். அதிகாரிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் ஒரு முடிவுக்கு வரும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள இந்தக் காலம் உங்களுக்கு நல்ல காலமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் அனுகூலத்தை பெறுவார்கள். அனைத்து தரப்பினருக்கும் இந்த மாதத்தில் அனுகூலமான பலன்களே ஏற்படும்.

குரு பகவான் சஞ்சாரம் 5.1.2020 முதல் 7.3.2020 வரை :

இந்த நாட்களில் அலைச்சல் இருந்தாலும் கூட உங்களது முயற்சிக்கு தக்க நல்ல பலன் கிடைக்காமல் போகாது. இது நாள் வரையில் இருந்து வந்த எதிர்ப்புகள் யாவும் மறையும். குடும்பத்தேவைகள் அனைத்தும் நல்ல படியாக பூர்த்தி ஆகும். கடன் பிரச்சனைகள் கூட தீரும். சிலர் புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வார்கள். இப்படியாக சொத்து வாங்குவது தொடர்பாக சுப செலவுகள் எல்லாம் கூட இந்தக் காலத்தில் ஏற்பட இடம் உண்டு. ராகு/ கேதுக்கள் சஞ்சாரம் சாதகமாக இல்லாத காரணத்தால் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் நீங்கள் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அரசு வகையில் நன்மைகள் வரும் அல்லது இது நாள் வரையில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். உத்யோகஸ்தர்களுக்கு கூட எதிர்பார்க்கும் நன்மைகள் நல்ல படியாக நடந்தேறும். கூட்டாளிகள் அல்லது உடன் வேலை செய்பவர்கள் அனுசரணையாக இருப்பார்கள். இந்தக் கால கட்டத்தில் மாணவர்கள் மட்டும் கல்வியில் கூடுதல் கவனத்தை செலுத்துவது நல்லது. மற்றபடி, ஏனையோருக்கு நல்ல பலன்கள் தான் ஏற்படும்.

குரு பகவான் சஞ்சாரம் 8.3.2020 முதல் 29.3.2020 வரை :

பணவரவு திருப்தி தரும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கக் கூடிய யோகம் கிடைக்கப்பெறும். இது நாள் வரையில் தொழில் ரீதியாக இருந்து வந்த போட்டி, பொறாமைகள் பெருமளவில் குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமணம் ஆகி குழந்தை இல்லாத அன்பர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். ராகு/ கேதுக்கள் சஞ்சாரம் சாதகமாக இல்லாவிட்டாலும் கூட குரு அருளால் தடை இன்றி வெற்றிகள் பெறுவீர்கள். கொடுக்கல் - வாங்கலில் சிறப்பான நிலை காணப்படும். எனினும் சர்ப்ப கிரகங்களின் தாக்கத்தால் கணவன் - மனைவி உறவில் சச்சரவுகள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. மற்றபடி, அன்றாடப் பணிகளில் தெம்புடன் நீங்கள் செயல்படுவீர்கள். மாணவர்கள் மட்டும் சோம்பலை களைந்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

குரு பகவான் சஞ்சாரம் 30.3.2020 முதல் 14.5.2020 வரை :

குரு பகவான் அதிச்சாரமாக சனியுடன் சேர்க்கை பெற்று அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் காலம் என்பதால் இந்தக் காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் வந்து போக இடம் உண்டு. எதிர்பாராத மருத்துவ செலவுகள் வராமல் இயன்ற அளவில் உடலை பாதுகாத்துக் கொள்ளுங்கள். குரு அருள் இந்தக் காலத்தில் குறிப்பாக குறைந்து காணப்படுவதால் பொருளாதாரம் ஏற்ற - இறக்கத்துடன் காணப்பட இடம் உண்டு. இதனால் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி ஆவதில் தாமதம் ஏற்பட இடம் உண்டு. கொடுக்கல் - வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்துவதை முடிந்த வரையில் தவிர்க்கப்பாருங்கள். வியாபார ரீதியாக நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகளை தாண்டியே வெற்றி கிடைக்கப்பெறும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் தேடி வரும். இதனால் வேலை பளு அதிகரிக்கலாம். மாணவர்கள் தேவை இல்லாத சகவாசங்களை தவிர்ப்பது நல்லது. மொத்தத்தில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தும் படியாக கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். அனைத்துத் தரப்பினரும் இந்தக் காலத்தில் சோதனையை தாண்டித் தான் முன்னேறும் படியாக இருக்கும். இது மிகவும் சுமாரான காலமே. ஆனாலும் சமாளித்து இறுதியில் வெற்றி பெற்று விடுவீர்கள். விநாயகரை அருகம்புல் சாற்றி வணங்கி வாருங்கள். அத்துடன் கோளறு பதிகம் படிப்பது நன்மை தரும்.

குரு பகவான் சஞ்சாரம் 15.5.2020 முதல் 12.9.2020 வரை :

குரு பகவான் வக்கிர கதியில் சஞ்சரிக்கும் காலம். அஷ்டம சனியின் தாக்கம் அதிக அளவில் மேலோங்கும். இதனால் தொழில் ரீதியாக திடீர் தேக்க நிலை ஏற்பட இடம் உண்டு. தொழில், வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள அதிகம் பாடு பட வேண்டி இருக்கும். உற்றார் - உறவினர்களை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டிய கால கட்டம் ஆகும். பெரிய தொகையை கடனாகக் கொடுப்பதை தவிர்க்கவும். முடிந்த வரையில் சிலர் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் புதிய கடன்கள் வராமல் பார்த்துக் கொள்ளலாம். திடீர் பயணங்கள் சிலருக்கு அலைச்சலையும், சோர்வையும் உடன் தரக்கூடும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. சில மாணவர்களுக்கு சுற்றுலா போன்ற வெளியூர் பயணங்களுக்கு செல்லும் வாய்ப்பு கூட ஏற்படலாம். எனினும், அவ்வாறு செல்ல நேரிட்டால் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். குறிப்பாக நீர் நிலைகளில் இறங்கும் சமயத்தில் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

குரு பகவான் சஞ்சாரம் 13.9.2020 முதல் 30.10.2020 வரை :

குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடைந்து மீண்டும் 7 ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் காலம் இது என்பதால் கடந்த மாதங்களில் இருந்து வந்த குளறு படிகள் ஒரு முடிவுக்கு வரும். பொருளாதாரம் சிறப்புப் பெறும். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் பாக்கியம் கூட உண்டாகும். கணவன் - மனைவிக்குள் இது முதற்கொண்டு இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் கூட படிப்படியாகக் குறையும். எனினும் அஷ்டம சனி மறுபக்கம் ஆக்ரோஷமாக நடந்து வருவதால் வண்டி வாகனங்களில் செல்லும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். அதேபோல, உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். வெளி இடங்களுக்கு செல்லும் சமயத்தில் கூட உணவு விஷயத்தில் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றபடி, உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல திருப்பு முனைகள் ஏற்படும். அதேபோல, புதிய வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் தகுதிக்கு ஏற்ப நல்ல வேலை கிடைக்கப்பெறும். உற்றார் - உறவினர்கள் வழியில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் நல்ல மதிப்பெண்ணை பெறுவார்கள். சிலர் பதக்கங்களை கூட வெல்வார்கள். மொத்தத்தில் அனைவருக்குமே நல்ல காலமாக இந்தக் காலம் இருக்கும்.

குரு பகவான் சஞ்சாரம் 31.10.2020 முதல் 20.11.2020 வரை :

முயற்சிக்கு தக்க நல்ல பலன் இந்தக் காலத்தில் கிடைக்காமல் போகாது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். உற்றார் - உறவினர்கள் ஒத்துழைப்பு ஆதரவு தரும். எனினும் அஷ்டம சனியின் தாக்கத்தால் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்ளப்பாருங்கள். சிலருக்கு ஒரு அறுவை சிகிச்சை மூலம் நெடுநாள் உடலில் இருந்து வந்த ஒரு பிரச்சனை தீர்க்கப்படும். மற்றபடி கணவன் - மனைவி இடையே சிறு, சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் அவர்களுக்குள் ஒற்றுமை என்பது சிறப்பாகவே இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பல நல்ல திருப்பங்களை எல்லாம் இந்தக் காலத்தில் சந்திப்பார்கள். தொழில், வியாபாரம் நல்ல நிலையில் நடைபெறும். எனினும், மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். அஷ்டம சனியின் தாக்கத்தால் சிலர் அதிக விடுப்பு எடுத்து ஆசிரியர்களிடம் பேச்சு வாங்கலாம். இதனை தவிர்க்க அனுமனை சனிக் கிழமைகளில் வழிபட்டு வாருங்கள்.

பரிகாரம்:

வர இருக்கிற வருடங்கள் முழுவதுமே சனி பகவானின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக இந்த குரு பெயர்ச்சியில் சனி பகவான் 7,8 ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இந்த சஞ்சாரம் உங்களுக்கு அதிக அளவில் எதிர்மறை தாக்குதல்களை தரலாம். இதில் இருந்து நீங்கள் விடுபட சனிப்பிரீதி செய்து கொள்வது நல்லது. அதாவது உடல் ஒத்துழைத்தால் சனிக் கிழமைகளில் நல்லெண்ணெய் ஸ்நானம் செய்யுங்கள். முடிந்தால் அல்லது வாய்ப்பு கிடைத்தால் அவசியம் நீங்கள் திருப்பதி சென்று திருமாலை வழிபட்டு வருவது சிறப்பு. ராகு காலத்தில் துர்க்கைக்கு குங்கும அர்ச்சனை செய்வது கூட உங்களுக்கு நன்மை தரும். தடைகளை விளக்கும். இப்படியாக நீங்கள் சோதனைகளுக்கு பரிகாரம் தேடலாம்.


வணங்க வேண்டிய தெய்வம் : திருமால்

ராசியான திசை : வடக்கு

ராசிக்கல் : மரகதம்

ராசியான கிழமை : புதன்

ராசியான நிறம் : பச்சை

ராசியான எண்கள் : 5,6,8

Previous Post Next Post