-->

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - ரிஷபம்


குரு பெயர்ச்சி ரிஷப ராசி


சகிப்புத்தன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களுக்கு

இது நாள் வரையில் உங்களது ராசிக்கு 7 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த குரு பகவான், வாக்கிய பஞ்சாங்கப்படி 28.10.2019ம் தேதியும் திருக்கணிதப்படி 5.11.2019 தேதியும் உங்களது ராசிக்கு 8ம் இடமான அஷ்டமஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் இனி வரும் காலங்களில் நீங்கள் எதிலும் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ளவும். பொறுமையை அதிகம் கையாளவும். இதனால் பொருளாதார அளவில் சில நெருக்கடிகளை நீங்கள் சந்திக்க இடம் உண்டு. முடிந்த வரையில் இனி வரும் காலங்களில் நீங்கள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளப்பாருங்கள். ராகு/ கேதுக்கள் தொடர்ந்து சாதகம் இல்லாமல் சஞ்சாரம் செய்வதால் உங்களது குடும்ப வாழ்வில் அதிக சலனங்கள் ஏற்படாமல் பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளப் பாருங்கள். குறிப்பாக கணவன் - மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய காலம்.

குரு பெயர்ச்சி ரிஷபம் 2019


உற்றார் உறவினர்களிடம் கூட முடிந்த வரையில் வாக்கு வாதத்தை தவிர்க்கப் பாருங்கள். உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவர் அறிவுரை இன்றி மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். அதே போல, மருந்துகளின் காலாவதி தேதியை பார்த்துச் சாப்பிடுங்கள். இருக்கும் தொழிலை கட்டிக் காப்பாற்ற பாருங்கள். பெரிய முயற்சிகளை நன்கு சிந்தித்து செயல்படுத்துங்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தொழில் ரீதியாக தேக்க நிலை ஏற்படாமல் இருக்க குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து செய்யுங்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் பிறர் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டிய சூழ்நிலை வரலாம். வேலையை விட நினைப்பது இந்தக் காலத்தில் பெரிய தவறாகிப் போய்விடும்.

உடன் வேலை செய்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். குறிப்பாக அலுவலகத்தில் முக்கியக் கோப்புகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். மனதில் பட்டதை எல்லாம் பேசாமல் இருப்பது நல்லது. சிலர் சிறிய செலவு தானே என்று வீட்டை பராமரிக்க வேலைகளை ஆரம்பிக்கலாம்... இறுதியில் அது பெரிய செலவாகிப் போய்விடும். அதனால் எதை செய்தாலும் திட்டமிட்டு செய்யுங்கள். வேலையை நன்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்புக் கொடுங்கள். எனினும் பெரும்பாலான கிரகங்கள் அந்த அளவிற்கு சாதகமாக இல்லாவிட்டாலும் கூட குரு பார்வை இறுதியில் உங்களை இக்கட்டான சூழலில் இருந்து காக்கும். அதனால் அதிக கவலைகள் வேண்டாம்.

பெண்கள்:

உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்வது நல்லது. சில பெண்களுக்கு வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் அவ்வப்போது வந்து போகலாம். பெண்கள் சம்மந்தமான இயற்கை பிரச்சனைகளால் மருத்துவ செலவுகள் கூட ஏற்படும். திருமண வயதை அடைந்த பெண்களுக்கு திருமண பேச்சுவார்த்தைகள் அதிக அலைச்சலை தந்து பின்னரே வெற்றி அடையும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது உங்களுக்கு நன்மை தரும். பணவரவுகளில் அதிக ஏற்ற இறக்கங்கள் இருந்து வரும். அதனால் சேமிப்புகளை அதிகரித்து, ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம்:

உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். குறிப்பாக கை, கால்கள் மற்றும் மூட்டுகளில் அடிக்கடி வலி வந்து போகலாம். வண்டி - வாகனங்களில் செல்லும் சமயத்தில் கூட அதிக கவனத்துடன் சென்று வாருங்கள். சிலருக்கு அஜீரணக் கோளாறுகள் ஏற்பட இடம் உண்டு. உடற்பயிற்சி செய்வதும், உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பதும் உங்களுக்கு நன்மை செய்யும்.

குடும்பம் மற்றும் பொருளாதார நிலை:

நீங்கள் பணம் கொடுக்கல் - வாங்கலில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். குறிப்பாக பெரிய தொகையை கையாளும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். கேட்ட இடத்தில் இருந்து பணம் வருவதற்கு தாமதம் ஆனாலும் கூட அதனை எல்லாம் நீங்கள் சமாளித்து விடுவீர்கள். அதனால் கவலை வேண்டாம். . எதையும் திட்டமிட்டு செய்யுங்கள். சிலருக்கு இந்த குரு பெயர்ச்சியில் புதிய கடன்கள் உருவாக இடம் உண்டு. முடிந்த வரையில் தேவையான பொருள்களை மட்டும் வாங்கிக் கொள்ளவும். பெரும்பாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளப்பாருங்கள். அதேபோல, குடும்ப உறுப்பினர்களை அதிகம் அனுசரித்துச் செல்லுங்கள். சொந்த - பந்தங்களிடம் எல்லா விஷயங்களையும் பகிர வேண்டாம். யோசித்துப் பேசுவது நன்மை தரும்.

தொழில், வியாபாரம்:

கமிஷன், ஏஜென்சி, கான்டராக்ட் சம்பந்தமான தொழில் செய்பவர்கள் எதிலும் பொறுமையுடன் இருந்து கொள்ளவும். அதிக லாபத்தை எதிர்பார்த்து இருக்கும் வாய்ப்புகளை இழக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பண விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். அப்போது தான் தேவை இல்லாத வீண் விரயங்களை உடனுக்குடன் நீங்கள் தவிர்க்க இயலும். நம்பியர்களே ஏமாற்றலாம். எனினும் ஏற்றுமதி - இறக்குமதி தொழில் செய்பவர்கள் ஓரளவு நன்மை பெறுவார்கள். இவை தவிர வியாபாரம் அல்லது சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்க இடம் உண்டு. வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள பெரும்பாடு பட வேண்டி இருக்கும். தொழில் ரீதியாக நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் அதிக அலைச்சலையும் சொற்ப வெற்றியையும் தரும் என்பதால் குல தெய்வத்தை பூஜித்து புதிய முயற்சிகளை செய்யுங்கள். மொத்தத்தில் இது ஒரு சுமாரான, சவாலான கால கட்டம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உத்தியோகஸ்தர்கள்:

உயர் அதிகாரிகள் கெடுபிடிகள் கொஞ்சம் அதிகம் இருக்கத் தான் செய்யும். நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு குற்றம் கண்டு பிடிக்கப்படலாம். வேலைப்பளு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரிக்கும். உத்யோகத்தில் புதிய பொறுப்புகளால் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க இயலாமல் போகலாம். அதனால் வேலையை திட்டமிட்டுச் செய்யுங்கள். எக்காரணம் கொண்டும் வேலையை விட்டு விடாதீர்கள். இந்த குரு பெயர்ச்சியில் நீங்கள் எங்கு சென்றாலும் ஒரே நிலை தான் இருக்கும். இக்கரைக்கு - அக்கரை பச்சையாகத் தெரியலாம்!.

அரசியல்வாதிகள்:

எதிலும் நிதானத்தை கடைபிடியுங்கள். பெரிய தலைவர்களிடம் பேசும் சமயத்தில் கூடுதல் நிதானத்துடன் பேசுங்கள். குறிப்பாக மேடை பேச்சுக்களில் கைத்தட்டலில் மயங்கி எதையும் குதர்க்கமாக பேசி விட்டு பிறகு சிக்கிக் கொள்ளாதீர்கள். கட்சிப் பணிகளுக்கான கைக்காசு போட்டு செலவு செய்ய வேண்டி இருக்கும். நேற்று வந்தவர்கள் தலைமைக்கு நெருக்கம் ஆவதைக் கண்டு மனம் வெதும்ப வேண்டாம். கட்சியில் உங்கள் செல்வாக்கு நிலைக்க குரு வழிபாடு செய்யுங்கள். நன்கு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு படிக்க உதவி செய்யுங்கள். இதனால் நிச்சயம் மேற்கண்ட தீய பலன்கள் குறைந்து குரு அருளை பெறுவீர்கள்.

விவசாயம் செய்பவர்கள்:

விளைச்சல் சுமாராகத் தான் இருக்கும். இது வரையில் வாங்கிய விவசாயக் கடன்களால் தேவை இல்லாத நெருக்கடிகளை சிலர் சந்திக்க நேரலாம். எனினும் உங்களது உழைப்பிற்கான பலன் இறுதியில் உங்களை வந்து சேரும். கவலை படாதீர்கள்.கால் நடைகள் வளர்ப்பவர்கள் கால் நடைகளுக்குத் தேவையான அன்றாட மருத்துவ விஷயங்களில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ளவும்.

மாணவ - மாணவியர்:

ஞாபக மறதி வராமல் இருக்க அதிகாலையில் எழுந்து சில மணி நேரங்கள் தியானப் பயிற்சிகளில் ஈடுபடவும். உடல் ஆரோக்கியத்தில் குறிப்பாக கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்ளவும். நண்பர்களை கூடப் பார்த்துத் தேர்ந்து எடுத்துக் பழகவும். மொத்தத்தில் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி பெற்றோருக்குப் பெருமை தேடித் தர வேண்டிய காலம் இது. மொத்தத்தில் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அதிக அக்கறையுடன் இருந்து கொள்ளுங்கள்.

குரு பகவான் சஞ்சாரம் 28.10.2019 முதல் 4.1.2020 வரை :

உடல் ஆரோக்கியத்தில் இந்தக் கால கட்டத்தில் குறிப்பாக கூடுதல் கவனத்தை செலுத்துவது மிக நல்லது. அன்றாடப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தப் பாருங்கள். அலைச்சல் அனைத்துத் தரப்பினருக்கும் இருக்கும் தான். அதனை சமாளித்தே நீங்கள் வெற்றி பெற வேண்டி இருக்கும். சிலருக்கு வாழ்க்கையில் சில சோதனைகளை சந்தித்து அதில் இருந்து விடுபட மனம் ஆன்மீகத்தை வடிகாலாகத் தேடும். அந்தத் தேடுதல் இறுதியில் நன்மை அளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரி ஒத்துழைப்பு அவ்வப்போது ஆறுதல் தந்தாலும் கூட பதவி உயர்வு வர சற்றே தாமதம் ஆகும். கொடுக்கல் - வாங்கலில் பெருந்தொகையை கடனாகக் கொடுப்பதை தவிர்க்கப்பாருங்கள். சில ஏமாற்றுப் பேர்வழிகள் உங்களை நெருங்கி ஏமாற்ற நினைப்பார்கள். குறிப்பாக அன்பு வார்த்தைகளில் மயங்கி மோசடி நபர்களுக்கு ஜாமீன் போட்டு விடாதீர்கள். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற இயலும். மொத்தத்தில் சோதனைகளை கடந்து சாதனை படைக்க வேண்டிய காலம் இது.

குரு பகவான் சஞ்சாரம் 5.1.2020 முதல் 7.3.2020 வரை :

கணவன் - மனைவி இடையே இந்தக் காலங்களில் தேவை இல்லாத விவாதங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். குடும்பத்தில் சிக்கனமாக இருந்தும் கூட எதிர்பாராத செலவுகள் வருகிறதே என்று நீங்கள் வருந்த இடம் உண்டு. கொடுக்கல் - வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். நம்பியவர்களே பணம் தராமல் இழுத்தடிக்கலாம். இதனால் மனம் கவலை கொள்ளலாம். இறைவனை மட்டும் நம்புங்கள். மனதில் பட்ட கருத்துக்களை எல்லாம் வெளியே பேசி விடாதீர்கள். 24.1.2020 க்கு பிறகு அஷ்டம சனி விலகும் காலம் உங்களுக்கு நல்ல காலமாக இருக்கும். இப்போதைக்கு இதை நினைத்து சந்தோஷப்படுங்கள். உங்களை இதுவரையில் இறுக்கத்தில் வைத்து இருந்த சுமைகள் இனி ஒவ்வொன்றாகத் தளரும். அதனால் 24.1.20 க்கு பிறகு சில மகிழ்ச்சியான சம்பவங்களை வாழ்வில் காணுவீர்கள். இதனால் வாழ்வில் ஒரு பிடிப்பு ஏற்படும். அதே சமயத்தில், பிறர் விஷயங்களில் தலையிடுவதைக் கூடுமான வரையில் தவிர்க்கவும். குறிப்பாக மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொண்டு படிக்க வேண்டிய காலம். தினமும் விநாயகர் வழிபாடு உங்களது வேதனைகளை குறைக்கும்.

குரு பகவான் சஞ்சாரம் 8.3.2020 முதல் 29.3.2020 வரை :

உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய காலம் இது. சின்ன உடல் அசௌக்கியம் அடிக்கடி ஏற்பட்டு சேமிப்பு கரையலாம். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்க்கப் பாருங்கள். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்பட இடம் உண்டு. கொடுக்கல் - வாங்கலில் பெரிய தொகையை இப்போதைக்கு நீங்கள் ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் நிலவினாலும் கூட அவற்றை எல்லாம் சமாளித்து இறுதியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். பெண்கள் மாற்றுப் பாலினத்தவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். குடும்ப விஷயங்களை அந்நியர்களிடம் குறிப்பாகப் பகிர வேண்டாம். மாணவர்கள் முழு முயற்சியுடன் செயல்பட்டால் மட்டுமே கல்வியில் எதிர்பார்க்கும் நல்ல தேர்ச்சியை பெற முடியும். ஞாபக மறதி போன்ற பிரச்சனைகளில் சிக்காமல் இருக்க வல்லாரை போன்ற கீரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக வண்டி - வாகனங்களில் வித்தைகளை தவிருங்கள்.

குரு பகவான் சஞ்சாரம் 30.3.2020 முதல் 14.5.2020 வரை :

குரு பகவான் அதிசாரமாக சஞ்சரிப்பதால் திடீர் என்று பொருளாதார நிலையில் இருந்து வந்த மந்த நிலை தீரும். தேவைகள் நல்ல படியாக நிறைவேறும். சிலர் வீட்டுக்குத் தேவையான புதிய பொருள்களை வாங்கி மகிழ்வார்கள். கொடுக்கல் - வாங்கலில் கூட இனிதே பெரிய தொகையை ஈடுபடுத்தி வெற்றி காணுவீர்கள். எனினும் ஆரோக்கியத்தில் எப்போதுமே நீங்கள் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்வது உங்களுக்கு நல்லது. அதனை தவிர்க்க தன்வந்திரி பகவானை நீங்கள் வணங்கி வாருங்கள். மற்றபடி நல்ல திருப்பங்களால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் நீங்கள் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். கணிசமான திடீர் லாபங்கள் மகிழ்ச்சி தரும். அரசு வழியில் கூட எதிர்பார்க்கும் நன்மைகள் கிடைக்கப்பெறும். மாணவர்களுக்கு இந்தக் காலம் இனிய காலமாக இருக்கும்.

குரு பகவான் சஞ்சாரம் 15.5.2020 முதல் 12.9.2020 வரை :

முயற்சிகளில் சில தடைகளை கடந்து சாதிக்கும் காலமாக இந்தக் காலம் இருக்கும். எதையும் சமாளித்து ஏற்றம் பெரும் காலமாக இந்தக் காலம் இருக்கும். சிலருக்கு நெடுநாள் ஆசைகள் கூடப் பூர்த்தி ஆகலாம். ராகு/ கேதுக்களின் சஞ்சாரத்தால் கணவன் - மனைவி இடையே மட்டும் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பிரச்சனைகளில், அந்நிய நபர்களை தலையிட அனுமதிக்காதீர்கள். மற்றபடி, கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். இதனால் சமூகத்தில் நன்கு மதிக்கப்படுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்பை பெறுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் கூட உயர் அதிகாரிகள் உங்களை மதிப்பார்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

குரு பகவான் சஞ்சாரம் 13.9.2020 முதல் 30.10.2020 வரை :

இந்தக் காலத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். எனினும் அதனை சமாளிக்கும் அளவிற்கு பணவருவாய் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். 23.9.20 க்கு பிறகு கணவன் - மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். முடிந்தவரையில் உற்றார் - உறவினர்களை அனுசரித்துச் செல்லுங்கள். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சிறு, சிறு பாதிப்புகள் வந்து போக இடம் உண்டு. எனினும் விரைவில் அதில் இருந்து நீங்கள் சுகம் பெற்று விடுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குப் போட்டி, பொறாமைகள் வந்தாலும் லாபத்தை இறுதியில் போராடிப் பெற்று விடுவீர்கள். பயணங்கள் தேவை இல்லாத அலைச்சலை தரலாம். சிலர் ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவார்கள். மாணவர்கள் மட்டும் கல்வியில் கூடுதல் கவனத்தை எடுத்துப் படிப்பது நல்லது.

குரு பகவான் சஞ்சாரம் 31.10.2020 முதல் 20.11.2020 வரை :

குடும்பத்தில் சின்னச் சின்ன சலனங்கள் இருந்தாலும் கூட பெரிய அளவில் பாதிப்புகள் இருக்க வாய்ப்பு இல்லை. பொருள் வரவு ஏற்ற இறக்கமாக இருக்கலாம் என்பதால் தேவை இல்லாத ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் - வாங்கலில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். தொழில் செய்பவர்கள் தொழிலாளர்களிடம் பேசும் சமயத்தில் கவனமாகவும், நிதானமாகவும் பேசுவது நல்லது. ஆனால், உத்யோகஸ்தர்களோ மறுபக்கம் தொழில் ரீதியாக சில நல்ல திருப்பங்களை அடையலாம். வியாபாரிகள் போட்டிகளுக்கு இடையே வெற்றி பெறலாம். ஆனால் அனைத்துத் தரப்பினரும் அலைச்சலை தவிர்க்க இயலாது தான். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்ள வேண்டிய கால கட்டம். துர்க்கையை இந்தக் காலத்தில் அரளி சாற்றி அதிகம் வழிபட்டு வாருங்கள்.

பரிகாரம்:

வியாழக்கிழமையில் உங்களுக்குப் பிடித்த உங்கள் இஷ்ட தெய்வத்தை மஞ்சள் நிறம் கொண்ட பூக்களை கொண்டு பூஜை செய்து நெய் விளக்குப் போட்டு வழிபட்டு வாருங்கள். இதனால் மேற்கண்ட தீமைகள் குறைந்து நன்மைகள் மேலோங்கும். இவை தவிர ராகு காலத்தில் அரளி சாற்றி துர்க்கையை அதிகம் வழிபடுவது சிறப்பு



வணங்க வேண்டிய தெய்வம் : மகா லட்சுமி

ராசியான திசை: தென்கிழக்கு

ராசிக்கல்: வைரம்

ராசியான கிழமை: வெள்ளி மற்றும் சனி

ராசியான நிறம் : வெள்ளை

ராசியான எண்கள் : 5,6,8

Previous Post Next Post