தலைக்கறி குழம்பு
ஆட்டுக்கறியில் புரதச் சத்து அதிகளவில் உள்ளது. ஆட்டின் ஒவ்வொரு உறுப்பும் பல்வேறு வித பலன்களை தருகிறது. சிலருக்கு ஆட்டின் தலைக்கறி மிகவும் விருப்ப உணவாக இருக்கும். தலைக்கறியை சாப்பிட்டால் இதயநோய்கள் தீரும் என்கின்றனர் மருத்துவர்கள். குடலுக்கு பலம் கிடைக்கும். பார்வை கோளாறால் பாதிக்கபட்டவர்கள் ஆட்டின் கண் சாப்பிட்டால் கண் கோளாறுகள் தீரும். ஆட்டின் நாக்கு உடல் சூட்டை குறைக்கும், மற்றும் சருமத்திற்கு இளமை தந்து பளபளப்பை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்
1. ஆட்டு தலை – 1
2. எண்ணெய் – தேவையான அளவு
3. பட்டை – 3 துண்டுகள்
4. ஏலக்காய் - 2
5. கிராம்பு - 3
6. வெங்காயம் – 5
7. தக்காளி - 4
8. இஞ்சி பூண்டு விழுது – 4 மேஜைக்கரண்டி
9. கொத்தமல்லி – 1 கைப்பிடி அளவு
10. புதினா – 1 கைப்பிடி அளவு
11. பச்சை மிளகாய் - ஐந்து
12. மிளகாய் தூள் – 2 மேஜைக்கரண்டி
13. தனியா தூள் – 3 மேஜைக்கரண்டி
14. மஞ்சள் தூள் – 1/4 மேஜைக்கரண்டி
15. உப்பு – தேவையான அளவு
16. தேங்காய் பால் – ½ கப்
செய்முறை
1. ஆட்டு தலையை நன்றாக சுத்தம் செய்து வாங்கி
வரவும்.
2. ஆட்டின் நாக்கை தனியாக எடுத்து அதை கொதிக்கும் நீரில்
போட்டு அதன் மேல்தோலை பிரித்தெடுக்கவும்.
3. ஆட்டின் தலையை நன்றாக கழுவி, அதனுடன் உப்பு, மஞ்சள், 1 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு
குக்கரில் வேகவிடவும்.
4. வேக வைத்த ஆட்டின் தலையை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
5. வாணலியில் எண்ணெய்
ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்து அதனுடன் வெங்காயத்தை
போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி கொள்ளவும்.
6. இப்போது வேகவைத்த ஆட்டின் தலையை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.
6. பின்பு அதனுடன் கொத்தமல்லி புதினா, பச்சை மிளகாய், மசாலா தூள் வகைகள் அனைத்தையும் போட்டு நன்றாக கிளறி கொள்ளவும்.
7. பிறகு தக்காளியை
பொடியாக நறுக்கி போட்டு கிளறவும். தீயை பத்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.
8. இறுதியில் தேங்காய் பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் மல்லி இழை
தூவி இறக்கவும்.
ஆட்டு தலைக்கறி குழம்பு உடம்புக்கு மிகவும் நல்லது.